Tuesday, November 07, 2006

சில நேரங்களும் சில படங்களும்

அண்மையில் லிவிங் ஸ்மைலின் பதிவினை பார்த்த போது நம் ஊரிலும் 98 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை அரசின் பொருளாதார தடையால், மருந்து தடையால் செத்து போன ஏராளமான மனிதர்களின் ஞாபகம் வந்தது. இந்த படம் அதே வருடம் நவம்பர் மாதம் கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்து உலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது.

இந்த படத்தை பெருமாள் கணேசன் என்னும் ஆங்கில ஆசிரியர் ஒருவர் எடுத்திருந்தார். படம் பிடிக்கப்பட்ட சிறிது நாட்களிலே அந்த குழந்தை இறந்து விட்டதாகவும், இடம்பெயர்ந்து வன்னியின் ஸ்கந்தபுரம் என்னும் இடத்தில் வசித்த குழந்தை அது எனவும் குறிப்பிட்டு இருந்தார். இலங்கை அரசின் இறுக்கமான செய்தி தணிக்கைக்கு மத்தியில் வெளியுலகத்தில் அந்த காலப்பகுதியில் வெளிவந்த ஒரே ஒரு புகைப்படம் இது.


இந்த படத்தை தான் அந்த காலப்பகுதியில் வெளிவந்த புத்தகங்கள், வெளியீடுகள், பத்திரிகைகள் எல்லாம் வெளியீட்டு இருந்தன.


இது கிழக்கு பல்கலைக்கழகம் வெளியிட்ட கலண்டர்.

கூடவே இன்னும் கொஞ்சப்படங்கள்.


Sunday, October 29, 2006

கண்ணம்மாவின் குழந்தை – 1

அர்த்த சாமத்தில்
வீரிட்டழும் குழந்தையை
மார்போடணைத்த படியே
அடுப்பை ஊதுகின்றாள்
கண்ணம்மா.

பாம்போ பல்லியோ
ஏதோவொன்று படுக்கையிற்
பிள்ளையைத் தீண்டியிருக்க வேண்டும்.
அம்மாவென்றே ஒரு வார்த்தை
உச்சரிக்கத் தெரியாத
பச்சைக் குழந்தையின் உடலில்
எப்பகுதி கடிபட்டிருக்கும்.

விழியிரண்டிருந்த போதும்
ஒளியிழந்த வீட்டினுள்
கடிவாயைக் கண்டு கொள்ள முடியாது
அடுப்பை நன்றாய் ஊதுகின்றாள் தாய்.

அடுத்தடுத்த வீடுகளிலும்
கட்டை மூட்டுவதுதான் வழக்கம்.
அங்கிருந்தும் வெளிச்சம்
பெற முடியாது.

இரண்டு யானைத் தீப்பெட்டிகள்
இல்லாது போன போதும்.
இருக்கின்ற தீப்பெட்டிகள்
யானை விலையைத் தமதாக்கிக் கொண்டதால்
தீக்கடை கோல் கண்டு பிடித்த
காலத்திற்குத் திரும்பி விட்ட
நம் வாழ்வை எண்ணி
நொந்தவாறே
அடுப்பை ஊதுகிறாள் அவள்.

சிறு பொறி மெல்ல மெல்லப்
பிரகாசித்துப்
பெரு வெளிச்சமான போது
பிள்ளையின் முகம் பார்த்தாள்
கண்ணம்மா.

கடிவாயை இனிக் கண்டு
கொள்ளத் தேவையில்லை.
பிள்ளை நிரந்தரமாகவே
தூங்குகின்றது.

மூட்டிய நெருப்பு நாளை
கொள்ளி வைக்க உதவும்.

இது தி.உதயசூரியன் அவர்களின்
  • கண்ணம்மா
  • என்னும் கவிதை தொகுப்பில் வந்த கவிதை.

    Saturday, October 28, 2006

    அவளும் நானும் (புகைப்படம்)

    அது ஒரு அழகிய கிராமம்..இயற்கை வனப்பு காட்டியிருந்தாலும்....நகரங்களின் அதிநவீனம் அங்கு போய் இன்னும் சேரவில்லை..ஒரு நாள் காலையில் எனது கனோன் கமராவை தூக்கி கொண்டு அங்கு போனேன்..குளத்தில் இருந்து நீர் வரும் வாய்க்காலில் சில சிறுவர்களும் சிறுமியரும் குதித்து குதித்து நீராடிக் கொண்டு இருந்தனர். நான் கமராவை தூக்கியதும் அண்ணை என்னை எடுங்கோ...அண்ணை என்னை எடுங்கோ..என என்னை சுற்றி கொண்டு கமராவின் லென்ஸை பிடித்து கொள்ள அருகே வந்தனர். அவர்களை குளிக்கும் போது இயல்பாக எடுக்க முயற்சித்தும்..சரி வரவில்லை..அப்போது இந்த பெண் அமைதியாக வந்து "அண்ணை என்னை தங்கச்சியையும் ஒருக்கா எடுத்து விடுங்கோ" என்றாள்..அந்த படங்கள் தான் இது.



    இடம் முத்துஐயன்கட்டு, வன்னி, ஈழம் (முத்துஐயன்கட்டு பற்றிய அறிய
  • (வசந்தனின் பதிவு)
  • நாள் 15-06-2005
    பொழுது மாலை 4.30

    Wednesday, October 25, 2006

    கண்ணம்மா சொன்ன கதைகள்

    ஓரிரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு உணவகத்தில் அவரை கண்டேன். கிட்டத்தட்ட மூன்று வருடங்களும் பிறகு அவரை சந்தித்தேன். ஒரு நாள் யாழ்ப்பாணம் போகும் பேருந்தில் வைத்து, அந்த சனநெரிசலுக்கு மத்தியிலும் தன் பையில் இருந்த தனது நூலான “கண்ணம்மா” வை தந்தார். அவரது பெயர் தி.உதயசூரியன். பாடசாலை ஒன்றில் தமிழ் ஆசிரியராக கடமையாற்றுகின்றார். தற்போது கண்ணம்மா பாகம் இரண்டை வெளியிடுவதற்கான வேலைகளில் ஈடுபடுவதாக கூறினார்.

    அவரின் கண்ணம்மா என்னும் முதலாவது தொகுப்பில் கண்ணம்மா என்னும் ஒரு பாடசாலை மாணவி வன்னியில் யுத்த சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அற்புதமாக எழுதி இருந்தார். ஆனால் அந்த நூலின் முன்னுரையை வாசிக்கமாலே இவற்றை கவிதைகள் என கொள்ள முடியுமா என் யோசித்த போது, முன்னுரையில் யோகரத்தினம் செகதீசுவரி யோகி அவர்கள் இப்படி எழுதி இருந்தார்.

    “இதில் வரும் கவிதைகளை கவிதைகள் என ஏற்க என்னால் முடியவில்லை. கவிதைகள் குறைந்தது ஓசை நயத்தையாவது கொண்டிருக்க வேண்டுமென்பது எனது தாழ்மையான கருத்து. காசி ஆனந்தன் அவர்கள் இவற்றை நறுக்குகள் என அழைக்கலாம். என்பார். இருந்த போதும் நடைமுறையில் இவை கவிதைகள் என்றே அழைக்கப்படுவதைக் கருத்திற் கொண்டு இவை பற்றிப் பேசுகையில் கவிதைகள் என்றே குறிப்பிடுகின்றேன்”
    ஆனால் உண்மையில் இவை கவிதையா? சிறுகதையா? என்றெல்லாம் யோசிப்பதை விட, யுத்த சூழலுக்குள் வாழும் வன்னிப்பாடசாலை சிறுமி

    எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எடுத்து எழுதியுள்ளார்.

    கண்ணம்மாவின் குழந்தையாக வரும் அந்த சிறுமி பட்டினியால், நோயால், சமூகத்தால், படும் துன்பங்களை இங்கே எழுதப்பட்டு இருக்கிறது. முதற்கவிதையாக வெளிச்சம் இதழில் ஏற்கனவே வெளிவந்த பிள்ளையாரை வேண்டுதல் என்னும் கவிதை இப்படி தொடர்கின்றது.

    பிள்ளையாரே,
    என்அம்மாவுக்கு
    ரீச்சர் வேலை
    கிடைக்கும் வரைபசி என் வயிற்றைத்
    தீண்டா திருக்கட்டும்.

    ஆசையோடு
    சாக்கிற் போட்டுக்கட்டித் தூக்கிய
    வாழைக்குலைக் குலை
    பழுக்கும் வரைகுண்டுகள் வந்து
    வீட்டுக் கூரை மேல்விழா திருக்கட்டும்.
    வீட்டுப்பாடம்சரியாய்ச் செய்துர்
    ச்சரிடம் நாளை
    மிக நன்று
    வாங்க வேண்டும்
    கணக்குச் செய்யும் வரை
    நிலவின்று மறையா திருக்கட்டும்.

    அடுத்த வாரம்வெள்ளி
    விழாக் காணும்
    எமது பள்ளிக்கூடம்
    இடம் பெயராதிருக்கட்டும்,
    நாங்கள் பட்டதுன்பம்
    இந்த பூமியில்எவருமே
    இனிப்படா திருக்கட்டும்.

    இந்த கவிதை ஒன்றே போதும் ஒரு பள்ளிச்சிறுமி படிக்க என்ன பாடுகின்றாள் என்பதை சொல்ல.. நடராசனின் ஆயிசா எப்படி பள்ளிச்சிறுமி ஒருத்தியின் மூலம் கல்வி முறைமையை சாடியதோ. அதே போல் கண்ணம்மா கல்வி கற்கும் சிறுமிற்கு வந்த இடைஞ்சலை சாடுகின்றது.

    இரவில் அடுப்பு மூட்டுவதற்கே தீப்பெட்டி இல்லா நிலையிலே, விளக்கெரித்து படிக்க முடியமால் நிலவொளியில் அம்மாவின் மடியிலே படுத்தபடி டாக்டரும், இன்சினியராகும் கனவுடன் குழந்தைகள் தூங்கிப்போய் விடும் காலம் அது. தாய் அவர்கள் பசி என நித்திரையால் எழும்பி விடக்கூடாது என வேண்டுவாள்.

    விழியிரண்டிருந்த போதும்
    ஒளியிழந்த வீட்டுனுள்
    கடிவாயைக் கண்டு கொள்ள முடியாது
    அடுப்பை நன்றாய் ஊதுகின்றாள் தாய்.
    அடுத்தடுத்த வீடுகளிலும்
    கட்டை மூட்டுவதுதான் வழக்கம்
    அங்கிருந்தும் வெளிச்சம்பெறமுடியாது.

    இரண்டு யானைத் தீப்பெட்டிகள்
    இல்லாது போன போதும்
    இருக்கின்ற தீப்பெட்டிகள்
    யானை விலையைத் தமதாக்கி கொண்டதால்
    தீக்கடை கோல் கண்டுபிடித்த
    காலத்திற்கே திரும்பி விட்டநம் வாழ்வை எண்ணி
    நொந்தவாறே அடுப்பை ஊதுகின்றாள்.

    இந்த கவிதை எனக்கு இன்னும் ஒரு ஞாபகத்தை கொண்டு வருகின்றது. அப்போது எல்லாம் பாடசாலையின் காலை பிரார்த்தனை கூட்டத்தில் பல மாணவர்கள் மயங்கி விழுவது ஒரு சாதாரண நிகழ்வாகி இருந்தது. காலில் செருப்பு அணிந்து பாடசாலைக்கு வந்த மாணவர்கள் சிலரே. கழுத்துப்பட்டி(tie) அணிந்து வர சொல்லும் அந்த பாடசாலைகளின் கண்டிப்பு இந்த பட்டினிகளுக்கு முன் இல்லமால் போயிட்டு. வீட்டுப்பாடம் செய்வதற்கு அவர்களுக்கு கைவிளக்கு கூட இல்லாது போயிட்டு. அல்லது கைவிளக்கு காற்றில் அணைவதை தடுப்பதற்கு அவர்களுக்கு ஏதுவும் இல்லாது போனது. புகையிரதம் ,விமானம் என்பதைதான் அவர்கள் படங்களில் பார்க்க வேண்டியிருந்தாலும்.. வெளிச்சம், உணவு என்பதை கூட அவர்கள் அப்படித்தான் பார்க்க வேண்டி வருமோ என்னும் நிலைமை உருவானது.

    அம்மா காலை வீட்டிலே
    ஆக்கித் தந்தா பாற்சோறு
    அள்ளி அள்ளிச் சாப்பிட
    ஆகா ஆகா நல்ல ருசி

    என்ற பாடலை மட்டும்தான் அவர்களால் பாட முடிந்திருந்தது. பாற்சோறை பார்க்க முடியாமலே இருந்தது.

    தி. உதயசூரியன் இந்த கண்ணம்மா மூலம் ,தான் ஆசிரியராக பணிபுரிந்த பொழுதுகளின் வேதனையை வடித்திருக்கிறார். ஒரு வகையில் அது காலத்தின் பதிவு. எனவே அதை யாரும் கவிதையோ..கட்டுரையோ வேற என்ன இழவுப் பெயரோ சொல்லி அழைக்கலாம். நான் பிறகு அந்த கவிதைகளை பதிவேற்றுகிறேன். படித்து விட்டு சொல்லுங்கள். அதில் உயிர் இருக்கிறதா இல்லையா என்று.

    Tuesday, October 17, 2006

    அழைத்தது ஆவியா?

    யாழ்ப்பாணம் - இது ஈழத்தின் வரைபடத்தின் தலை போன்று இருக்கும், தமிழர்களின் கலாச்சார தலைநகரம் என்று அழைக்கப்படும் பல் ஆயிரம் ஆண்டு பரம்பாரியம் கொண்ட நகர். ஈழத்தின் ஏனைய நகரங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்ல ஆனையிறவு என்ற இடத்தில் 50 மீற்றர் ஒடுக்கமான பாதை மாத்திரமே இருந்தது. ஏனைய பிரதேசங்கள் கடல் நீரேரியால் நிறைந்திருந்தது. அந்த குறுகலான 50 மீற்றர் பாதை தொடங்கும் இடமே. ஆனையிறவு என அழைக்கப்பட்டிருந்தது. அந்த குறுகலான பாதையில் ஏறததுதாழ 300 வருட காலமாக ஆங்கிலேய போலிசும், சிறிலங்கா பொலிசும் சட்டவிரோத கடத்தல்களில் ஈடுபடுவோரை பிடிக்கவென நின்றிருந்தனர். அதன் பின் போராளிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் போர் தொடங்கிய பின்னர் இலங்கை இராணுவம் வந்து அங்கு முகாமிட்டது. சின்ன வயசில் அப்பம்மாவை பார்க்க ஊர் போகும் போது ஆனையிறவில் எல்லோரையும் சோதனை பண்ணுவார்கள். நான் பஸ்சை வீட்டு இறங்குவதில்லை. அப்பாவும் , அம்மாவும் தான் இறங்கி போவினம். பஸ்சில் இருந்து இருந்து பார்த்தால் இருகரையும் உப்பு “மால்”கள் சம்பல் நிற மலைகள் போல காட்சியளிக்கும். அதிகாலையில் கலையாத பனிப்புகரும் , உப்புமால்களும் என்னுடைய சின்ன வயசில் ஆனையிறவை ஒரு மலை பிரதேசம் போன்றே எண்ணத்தோன்றியது.
    (Elepant pass என இருப்பது தான் ஆனையிறவு)
    1990களின் ஆரம்பத்தில் ஆண்டு பிறகு ஆனையிறவில் இருந்த இலங்கை இராணுவம் முன்னேறி வந்து அருகிருந்த பரந்தன் என்னும் நகரை கைப்பற்றியது. பிறகு சிறிது காலத்தில் திரும்பி போய் ஆனையிறவில் இருந்து கொண்டனர். அந்த இடைவெளியில் ஆனையிறவு மிகப்பெரிய இராணுவ முகாம் ஆயிற்று. நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் இராணுவ வாகனங்களும் அங்கு குவிக்கப்பட்டது.

    அதற்கு பிறகு நாங்கள் அப்பம்மாவை பார்க்க ஆனையிறவால் போக முடியாதிருந்தது. அதற்கு பிறகு ஆனையிறவில் இருந்து வலப்பக்கமாக இருந்த கடல் நீரேரியான கொம்படி – ஊரியான் என்னும் இடத்திற்கு ஊடாகத்தான் யாழ்ப்பாணம் போனம். எங்களை எல்லாம் ஒரு படகில் வைத்து ஒருவர் தள்ளிக்கொண்டு மறுகரையில் விடுவார். அவர் எப்போது இடுப்பளவு தண்ணீரிலும் சில வேளை அதை விட கூட தண்ணீருள்ளாலும்தான் வந்தார். சில இடங்களில் தண்ணீருக்குள் இருக்கும் மண் புட்டிகளில் முட்டி நின்று விடும். அவர் உடன பொறுத்திட்டு ஆம்பிளைகள் இறங்கி தள்ளுங்கோ என்பார். பிறகு அதில் இருக்கும் ஆம்பிளைகள் இறங்கி தள்ளி அந்த படகு அந்த புட்டியை கடக்க வைப்பார்கள். அந்த இடத்தின் பயணங்கள் எல்லாம் இரவில் மாத்திரம் தான் இருந்தது. ஏனெனில் பகல்களில் பயணம் செய்தோரை இலங்கை அரசின் கெலிகள் தாழப்பறந்து சூட்டுக்கொண்டதாக சொல்வார்கள். எங்களின் வீட்டுக்கருகே கடை வைத்திருந்த ஐங்கரன் ஸ்ரோஸ் கணபதிப்பிள்ளை அண்ணை அதில் தான் காயப்பட்டராம். அவரின் ஒரு காலின் கீழ்ப்பகுதியில் தசைகள் இல்லாது எலும்பை தோலால் போர்த்து போன்றுதான் இருந்தது. பிறகு கொஞ்ச நாளில் அந்த ஊரியன் கொம்படி பாதையாலும் போவதை நிற்பாட்டிச்சு. ஏனென்றும் நான் யாரிடம் கேட்கவில்லை. ஆனால் அதை ஆமி பிடித்திருந்தாக இப்போது கேள்விப்படுகின்றேன்.

    அதற்கு பிறகு ஆனையிறவுக்கு இடப்பக்கமாக இருந்த கிளாலியை யாழ்ப்பாணம் போக பாவிச்சம். அங்கு யாரும் படகை தள்ளிக்கொண்டு போக தேவையில்லை. இரண்டு எஞ்சின் அந்த படகில் கொழுகி இருக்கும். ஒன்றுதான் ஓட்டி இயக்குவார். மற்றது அனேகமாய் சும்மா இருக்கும். ஏனென்று அப்பாவிடம் கேட்டால் ஒரு இஞ்சின் பழுத போனால் அடுத்த இஞ்சினில் போகலாம் என்றும், நேவி துரத்தினால் இரண்டு இஞ்சினையும் இயக்கி வேகமாய் போகலாம் என்றார். ஆனால் கடவுளே என்று நான் போகும் போது ஒரு நாளும் இஞ்சினும் நிற்கவும் , நேவியும் துரத்தவில்லை. ஆனால் நாளாந்தம் கிளாலியின் கரைகளில் பிணங்கள் ஒதுங்கியபடி இருந்தது. இருந்தும் யாரும் பயணத்தை நிறுத்தவில்லை. சும்மாவா யாழ்ப்பாணத்தில் இருந்த 5 லட்சம் மக்களுக்கு சாப்பாடு, அவர்களின் உறவுகள் எல்லாம் கொண்டு போகும் பாதையாக கிளாலி இருந்த படியால் கிளாலியின் இரு கரையும் திருவிழா போலத்தான் இருக்கும்.

    கிளாலியின் இருகரைகளில் இறங்கியவுடன் எங்களை ஏற்றி செல்ல டக்ரர்களே காத்திருந்தன. நடுஇரவில் கரையிறங்கும் நாங்கள் அந்த ட்க்ரர்களில் இரவோடு இரவாக போவம். அந்த டக்ரர் எங்களை கொண்டு போய் ஒரு சிறு நகர் பிரதேசத்தில் விட்டால் அங்கிருந்து நாங்கள் எங்களின் இடத்திற்கு பஸ் பிடிக்க வேண்டியதுதான். மேடும் பள்ளமான அந்த ட்க்ரர் பாதைகளை போல பாதைகளில் நான் இதுவரைக்கும் வேறு எங்கும் பயணிக்கவில்லை. உடம்பின் பகுதிகள் புண்ணாகும் அளவிற்கு ட்க்ரர் குலுங்கி குலுங்கி செல்லும். அதற்குள்ளும் நான் என்னை கூட்டிப்போன அப்பாவின் மடியிலோ, மூத்த மாமாவின் மடியிலோ, நித்தி மாமாவின் மடியிலோ தூங்கிப்போவேன்.
    (கிளாலிக்கு மேலாலும் கெலிதான்)

    இப்படிப்பட்ட இந்த கிளாலியால் நான் ஏறந்தாழ 5 முறை போய் வந்திருக்கின்றேன். ஒரு முறை மூத்த மாமாவுடனும் , இன்னுமொரு முறை பிரகாஸ் அண்ணாவுடனும் வந்த பயணங்களின் ஞாபகங்கள் இப்போதும் உண்டு. கிளாலியில் பல படகுப்பாதைகள் இருந்தன. உதாரணமாக வியாபாரத்திற்கெனவும், மக்களின் போக்குவரத்துக்கு எனவும் கரையிலேயே சிறு சிறு தூர வித்தியாசத்தில் இருந்து படகுகள் அங்கும் அதற்குரிய இடங்களுக்கு போய் சேர்ந்தன. இவ்வாறான படகுப்பாதைகளை ரூட் (Root) என்பார்கள். வியாபார படகுப்பாதையாக இருந்தால் வியாபார ரூட் என்று அழைத்தார்கள். மக்களின் போக்குவரத்து பாதையை சன ரூட் எனவும் போராளிகளின் போக்குவரத்து பாதையை இயக்க ரூட் எனவும் அழைத்தனர்.

    ஒரு முறை மூத்த மாமா யாழ்ப்பாணத்திற்கு ஒரு தொகை வியாபார பொருட்களை கொண்டு புறப்பட்டனர். அவருடன் சேர்ந்து என்னையும் அனுப்பி விட்டனர். நாங்கள் வியாபார ரூட்டில் பொருட்களை ஏற்றிய படி புறப்பட்டோம். அங்கு ஏறந்தாழ இருபந்தைந்து சிறிய படகுகளில் பொருட்களை ஏற்றி ஒன்றுடன் ஒன்றை தொடுத்து கட்டி முன்னுக்கு சற்று பெரிய போட் அவற்றை இழுத்து போகும். ஏனெனில் எரிபொருள் பிரச்சனைக்காக. நாங்கள் எல்லாம் அந்த பெரிய போட்டில் இருந்து சின்ன போட்டுகளை பார்த்த படி இருப்பம். வியாபார ரூட்டில் போனால் திரும்பி வரும் போது அவர் இந்த வியாபார ரூட்டில் வரலாம் காசு தேவையில்லை. மற்றது சன ரூட் போல சன நெரிசல் இல்லை. எனவே திரும்பி போகும் போது வியாபார ரூட்டால் போக நானும் மூத்த மாமாவும் வந்தம்.

    ஆனால் எங்களின் துரதிஸ்டம் அன்று இங்கிருந்து படகு எதுவும் புறப்படவில்லை. எனவே அன்றிரவை கடற்கரையிலே கழிக்க வேண்டியதாயிற்று. இரண்டு பனையோலைகளை நிலத்திற்கு போட்டுக்கொண்டு கடற்காற்றை சமாளிக்க இரண்டு பனையோலைகளை மணலில் குத்தி விட்டுக்கொண்டு படுத்துக்கொண்டாலும் காற்றுக்கு இரண்டு ஓலைகளும் மோதி மோதி சத்தம் எழும்பியும், கடுமையான குளிர்காற்றும் என் நித்திரையை விழுங்கிக்கொண்டது. விடிந்தால் இயற்கை உபாதையை தீர்க்க சின்ன ஒரு ஈச்சம்பற்றையே இருந்தது. அந்த பற்றையையே அந்த கரையிருந்த பலர் பாவித்தனர். நான் அதற்குள் போவதாய் இருந்தால் கெந்திக்கோடு விளையாடுபவார்கள் போலவே செல்ல வேண்டி இருந்தது. எனவே அடக்கிக்கொண்டு வீட்டுக்கு போய்த்தான் அது எல்லாம் என்று தீர்மானித்துக்கொண்டேன். அந்த கடற்கரையில் ஒரேஒரு கடைதான் இருந்தது. அங்கு சாப்பாட்டுக்கென “கல்பணிஸ்” (கோதுமை மாவினால் செய்யப்பட்டு, மேலே சிறிது சீனி தூவி வெதுப்பப்பட்டிருக்கும்) மாத்திரமே இருந்தது. மூத்தமாமாவிற்கு எனக்கு தொடர்ச்சியாக கல்பணிஸ் வாங்கித் தர ஏதோ மாதிரி இருந்திருக்கும். அதனால் அவர் எனக்கு நிறைய காசு தந்து இந்தா நீ வேண்டியதை வாங்கி சாப்பிடு என்றார். அங்கோ கல்பணிஸை தவிர வேறு இல்லை. இப்படியே படகை பார்த்து பார்த்து மூன்று நாட்கள் கிளாலியின் கரையில் கல்பணிசுடன் பனையோலையில் கிடந்தோம். எனது ஈச்சம்பற்றை சபதத்தை மூன்று நாட்களுக்கு கட்டிக்காக்க முடியாது போனதால் கெந்தி கோடு விளையாடிய படியே அதற்குள் போய் காலைக்கடன் கழித்து விட்டு வந்தேன்.மூன்று நாட்களுக்கு பிறகு யாரோ ஒருவர் புகையிலையை வன்னிக்கு கொண்டு செல்ல வந்ததினால் அவரது படகிலேயே வந்து சேர்ந்தோம்.

    இதன் பிறகு ஒரு முறை பிரகாஸ் அண்ணாவுடன் சன ரூட்டால் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தோம். வரும் போது பிரகாஸ் சைக்கிளும் கொண்டு வந்திருந்தார். எனவே இந்த கரையில் இறங்கி ட்க்ரரில் ஏறமால் சைக்கிளில் பயணமாகினோம். நாங்கள் பரந்தனை நெருங்கும் போதும் நள்ளிரவு கடந்திருந்தது. ஆனாலும் நிலவொளி இருந்தது. பரந்தன் நகர் உடைந்து சின்ன பின்னமாகி இருந்தது. ஒரு மக்கள் குடியிருப்புக்களும் அங்கு இல்லை. நானும் பயத்துடன் சைக்கிளில் இருக்கிறேன். யாருமில்லா அத்தெருவில் நாங்கள் பயணம் போகின்றோம். தீடிரென ஒரு சத்தம். ஏதோ விழுந்தது போல..அத்துடன் யாரோ கூப்பிட்டது போலவும். பிரகாஸ் அண்ணா சட்டென்று சைக்கிளை திருப்பி சத்தம் வந்த இடத்தில் நிறுத்தினால்..அங்கு நாங்கள் கொண்டு வந்திருந்திருந்த பை ஒன்று விழுந்திருந்தது. அதுதான் அந்த விழுந்த சத்தத்திற்கு காரணம். அப்படியானால் கூப்பிட்டது யார். நான் அந்த பையை எடுக்க இறங்கினேன். பாதையின் கரையாக சத்தம் வந்த திசையாக பார்த்தேன். அந்த நிலவொளியில் ஒரு உருவம் நின்றது தெரிந்தது. திகைத்து போய் , உடல் குளிர வடிவாய் பார்த்தேன். அருகில் நொறுங்கியிருந்த இருந்த தேவாலயத்தில் இருந்து உடைந்து போன மாதா சிலை தனியாக சிறு சிறு உடைசலுடன் அங்கு இருந்தது. யார் கொண்டு வந்து வைத்தார்களோ, அல்லது குண்டு வெடிக்கும் போது தனியாக வந்து விழுந்ததோ..அக்கம்பக்கம் பார்த்தும் ஒருவரும் இல்லை. பிறகு வீடு வந்து சேர்ந்ததும் அம்மாவிடம் முதல் கதையையாக இதை சொன்னேன். அம்மா சொன்னா “ஏமம் சாமத்தில இப்படி வெளிக்கிட்ட யாரும் கூப்பிட்டு கேட்கும் தானே” என்று.

    Saturday, October 07, 2006

    தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம்

    “எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்” என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் வார்த்தைகள் கோபத்துடன் அவளிடம் இருந்து வந்தன. தேய்ந்து கொண்டு போன குரலிலும் இவ்வளவு கோபம் கொண்டு சொல்கிறாள், அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் கட்டிலில் வாடிய மலரென கிடக்கும் கௌசிகா. அவள்தான் உதயகுமார், பாக்கியலட்சுமியின் முதல் கனவு. அவர்களை பொறுத்த வரை குடும்பத்தின் நம்பிக்கை. குமுளமுனை மகா வித்தியாலயத்தின் அனைவரும் அறிந்த உயர்தரம் பயிலும் கெட்டிக்கார மாணவி அவள்.

    அவள் செஞ்சோலை வளாகத்தில் நடக்கும் வதிவிட தலைமைத்துவ பயிற்சி நெறியில் கலந்து கொள்ள பாடசாலை சார்பில் தயாரானாள். அதற்கு முன்“தமிழ்த்தினம்” என்னும் மாணவர்களின் தமிழ்த்திறமைக்கான போட்டி ஒன்றில் தமிழ் இலக்கண பிரிவில் போட்டியிட சென்றாள். அருகில் இருந்த முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து கலைப்பிரியா என்னும் மாணவியும் கலந்து கொண்டாள்.போட்டிக்களை முடித்துகொண்ட சில நாட்களிலேயே , செஞ்சோலை வளாகத்திற்கு தலைமைத்துவ வதிவிட பயிற்சி நெறியில் கலந்து கொள்ள வந்துவிட்டனர்.

    ஒகஸ்ட் 14 ம் நாள் 2006 ஆம் ஆண்டு காலை 7 மணி செஞ்சோலை வளாகம் எங்கும் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மிகச்சிறந்த மாணவிகளால் நிறைந்திருந்தது.

    அப்போதுதான் யாரும் எதிர்பார்த்திராத யாரும் கற்பனை செய்ய முடியாத அந்த சம்பவம் நடந்தேறியது. திடீரென அங்கு வந்த இலங்கை அரசின் “கிபிர்” எனப்படும் யுத்தக்குண்டு விமானங்கள் நான்கு சேர்ந்து தாழ பதிந்து பதிந்து வீசிய குண்டுகள் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மாணவிகளின் உடல்களை கிழித்து ரத்தசகதியில் போட்டன.

    ஒலியை விட வேகம் கூடிய , இலங்கை விமானப்படையின் யுத்த விமானங்களில் ஏறத்தாழ 40 வீதமான விமானங்கள் வந்து ஒவ்வொன்றும் 250 கிலோ எடையுள்ள, யுத்தத்தில் வீசப்படும் குண்டுகளை தங்கள் மீது வீசும் என அவர்கள் கற்பனை கூட செய்து இருக்கவில்லை என்பதினால் அவர்கள் ஓடி ஒளிந்து தப்பித்து கொள்ள முடியமால் போனது.

    தங்களது பாடசாலைகளின் சார்பில் தமிழ்த்தின போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் முதல் இரு இடங்களை பெற்றிருந்த சந்தோச செய்தி இரு பாடசாலைகளின் முதல்வர்களுக்கு கிடைத்தாலும்இவை எவற்றையும் அறியதவளாய் கிபிர் குண்டுகளால் கிழிக்கப்பட்ட கலைப்பிரியா உயிரற்ற உடலாக புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில் கிடந்தாள். அதே போல் கௌசிகாவும் மரணத்துடன் போராடிக்கொண்டு இருந்தாள்.


    (இதுதான் கெளசிகா)
    குண்டுகள் அவள் வயிற்றை கிழித்து குடல்களை பெருஞ்சேதம் செய்திருந்தன. மருந்துவர் அவளின் காயத்தின் நிலை பற்றி இன்னொரு மருந்துவருடன் ஆங்கிலத்தில் உரையாடியது அவளது காதிலும் விழுந்தது.


    (இதுதான் கலைப்பிரியா)
    கௌசிகா இனிமேல் உயிருடன் இருக்கபோவதில்லை என்பதை தெரிந்துகொண்டாள். தன்னுடன் பக்கத்தில் இருந்து சண்டை போட்டு விளையாடிய சிறுவர்கள், உறவினர்கள் எல்லாருடனும் கதைக்க வேணும் போல இருப்பதாக சொன்னாள். அவள் விருப்பப்படி ஊரே வந்து குவிந்தது.

    ஒகஸ்ட் 14 ம் நாள் 2006, காலை 10 மணியிருந்து 7 மணிவரை- புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் கௌசிகாவின் கட்டிலை சுற்றி அவள் பார்க்க விரும்பியவர்கள் நின்றிருந்தனர். அவள் உயிர் வலிக்க வலிக்க தனது இறுதி வார்த்தைகளை மெல்ல மெல்ல உதிர்ந்தாள்.


    “அம்மா....நான் மீள முடியாது போல் இருக்கிறது என்னை கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுங்கோ அம்மா”

    “தங்கச்சி விலோ...நீ அம்மாவின்ர சொல்லை கேட்டு நடக்க வேணும், நீ ஒருத்திதான் மிஞ்சப்போகின்றாய் கவனம்”

    “அப்பா நீங்கள் இனிமேல் குடிக்க கூடதப்பா”

    சிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்”

    “எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்”

    அம்மம்மா, அன்ரி, சித்தப்பா, மாமா, அப்பப்பா எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ, அம்மா உன்னை பிரியும் காலம் வருகுது. என்னை கட்டியணைம்மா...”

    “எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ”

    “அம்மா என்னை கொஞ்சிக்கொண்டு படு அம்மா”

    “கஜி...தேவாரம் பாடு”

    “பாய்....பாய்....பா....ய்ய்...

    இரவு 7.15 மணியளவில் எல்லோருடைய வேண்டுதல்கள், நேர்த்திகள், அழுகைகள் தாண்டி அவள் கையசைப்புடன் அவர்களிடம் இருந்து விடைபெற்றாள்

    (இதற்குள் யார் கெளசிகா யார் கலைப்பிரியா)
    (ஒகஸ்ட் 14 ஆம் நாள் ஈழத்தின் செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் வதிவிட பயிற்சி நெறியில் ஈடுபட்டிருந்த 52 மாணவிகள் இலங்கையரசின் விமானப்படை விமானங்களால் குண்டு வீசிக் கொல்லப்பட்டனர்)

    Tuesday, September 26, 2006

    தவறவிடப்பட்ட சையசைப்பு


    வீதியெங்கும் அலைந்து திரியும்
    நிழலுருக்களில்
    நீயும் இருப்பதாய்
    தோன்றுகின்றதெனக்கு,

    உன்
    அழுத்தமான
    முத்தத்தின் ஈரம்
    இன்னமும் காய்ந்திருக்காது
    உன் மருமகளின் கன்னங்களில்.
    நீ
    மூச்சு முட்ட முட்ட
    இறுக்கி அணைக்கும் ஈர ஸ்பரிசம்
    அவளுக்கினிமேல்
    எப்போதுமிருக்காது.....

    அக்காவின் விறைத்த கைகள்
    பெற்ற மடமடத்த யூரோத்தாள்களின்
    இசைக்கருவியை இசைக்கவும்
    இனியாரும் கிடையாது

    உன்
    கல்லறை தடவுகையில்
    நாதமெழுவதாய்
    கனவிலிருக்கிறது
    காற்று,.....


    தன்னை எடுத்து பிசைந்து
    மெட்டமைக்கும் கனவுக்கு
    ஆளில்லை என நாதியற்று கிடக்கிறது.

    நேற்றைய பொழுதில் தவறவிடப்பட்ட
    உன் கையசைப்பை
    நினைத்தபடியே
    வீதியோரம் நிற்கின்றேன்.
    இனி எந்த கையசைப்பையும் தவற
    விடுவதில்லையென
    கைகளை உயர உயர தூக்கி
    அசைத்த படியே....


    சில நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளரான எனது நண்பன் யுத்தக்களமொன்றில் இறந்த பின் எழுதியது...

    நிலவன்

    Monday, September 18, 2006

    வழக்கொன்றின் முடிவு


    காலம் கனிகிறது
    தூக்கு கயிறுகளும்
    துண்டாடும் கோடாரியும்
    கல்லறைகளும் தயாராக
    காலம் கனிகிறது


    தீர்ப்புக்காய் காத்திருந்த
    வழக்குகள் வருகின்றன.
    நாறும் புழுக்கடைந்த பிணங்களும்
    சாட்சிகளாய் வர
    காலம் கனிகின்றது

    இருளோடு குமட்டும் மணமெடுத்து
    பட்டமரம் தன்னில் குடிக்கும்
    இரத்தம் குடியிருக்கும் வெளவால்களும்
    வெள்ளைச்சேலை ராணியின்
    பச்சைமுக ஏவல்பேய்களும்
    ஒழிக

    நெரியுண்டு புதையுண்டு
    எரிந்தழிந்து போனதெல்லாம்
    மறுபடியும் விளைந்தெழுக
    என்றது தீர்ப்பு.

    நீதி தேவர்கள்
    வழங்கிய தீர்ப்பின்
    வரிகளால் இருளுண்ட நகரம்
    வெளிப்படைகின்றது

    இருளடைந்த நகரில் வெள்ளரசு
    மரத்தில் குடியிருக்கும்
    கோலியாத்தின் நண்பர்களே
    உங்களுக்காய் தூக்குகயிறுகளும்
    தூண்டாடும் கோடாரியும்
    கல்லறைகளும் தயாராகின்றது.

    வெளிச்சம் கலை இலக்கியம் இதழ் 2000