Sunday, August 05, 2007

செத்த வீடுகளை பகிர்வோம்.

(இதுதான் அந்த திருமலை செத்தவீடு)

சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்த ஒரு கொலையும், அதன் பின்னான இறுதி நிகழ்வுகளின் படங்களையும் பார்த்தது பல சம்பவங்களை தொடராக ஞாபகத்திற்கு கொண்டுவந்தது.


இலங்கையில் சாவுகள் நிகழ்தல் குறைந்து, நிகழ்த்தப்படுதல் அதிகரித்த பின்னர் செத்த வீடுகள் ஒன்றும் புதினத்திற்குரியதல்ல. இருப்பினும் ஒரு செத்த வீட்டில் இருந்தே இன்னொரு செத்தவீடு தீர்மானிக்கப்படுவதால் (கவனிக்க இங்கே திருமணத்தில் நிச்சயப்படும் இன்னொரு திருமணம் என்பது மாறியுள்ளது) செத்த வீடுகள் தவிர்க்க முடியாமல் கவனத்திற்குரிதாகின்றது.


1997 க்கு பின்னான சில காலங்கள் நான் பாடசாலைக்கு போகும் பொழுதுகளில் எந்த கடைகளுமே காலை ஒன்பது பத்து மணி வரை திறந்து இருப்பதில்லை. ஏனெனில் இரவில் வேட்டையாடப்பட்டவர்களின் உடல்கள் காலையில் கடை விறாந்தைகளில் கிடக்கும். பாவம் முழுவியளத்திற்கு அவரவர் அதிஸ்ரத்திற்கு ஏற்ப இரண்டோ மூன்றோ விறாந்தையில் கிடக்கும். பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் என்ன செய்வோம். முதலில் ஒதுங்கிப் போனோம். பின்னர் எங்களுக்கு அது ஒரு ஸ்கோர் சொல்வது போல ஒரு போதை தரும் ஒன்றாகியது. ஒவ்வொரு கடை விறாந்தையாய் நைசாய் நோட்டம் விட்டால் கணக்கு தெரிய வந்திடும் இன்றைக்கு டவுணுக்குள் மொத்தம் எவ்வளவு என்று. இப்படி நாங்களெல்லாம் பிணங்களிற்கும் , மரணங்களுக்கும் அஞ்சாதவர்கள் என்றும் அவை எங்களுக்கு பழக்கம் மிக்கவை என்று சொல்வதில் தான் எங்களுக்கு எத்தனை பெருமை.


அண்மையில் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைகழகத்தின் ஊடக வள நிலையத்தின் மாணவன் டிலக்சனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பெரும் கூட்டம் என்னுள் பல கேள்விகளை எழுப்பியது.

யாழ்ப்பாணத்தில் இன்னமும் இவ்வளவு பேர் செத்த வீட்டுக்கு போகக்கூடியவர்கள் இருக்கிறார்களா? அடுத்தது டிலக்சனுக்கு சூடு விழுந்த அன்று கூச்சல் போட்டவன், சடலத்தை தூக்க உதவியவன், விசாரணையில் சாட்சி சொன்னவன், செத்தவீட்டில் பாடை தூக்கியவன், பக்கத்துவீட்டுக்காரன், தோரணம் கட்டியவன், தோரணம் கட்டியவனின் சொந்தக்காரன், எனப் பலரில் இன்னமும் ஏன் ஒருவர் கூட சுடப்படவில்லை என்பது. தினசரிப் பத்திரிகையாளர்கள் இவர்களின் விபரங்களை எடுத்து வைத்துக் கொண்டால் செய்தியை முதலில் தர உதவும்.


இதே போல செத்தவீட்டில் இருந்து தீர்மானிக்கப்பட்ட இன்னொரு செத்த வீட்டின் கதையை உங்களுக்கு நான் சொல்லமால் இருக்கேலாது. இது நடந்தது 2005 இன் முற் பகுதியில். திருகோணமலையில் ஐந்து பாடசாலை மாணவர்கள் கடற்படையினரால் காதுக்குள் துப்பாக்கி குழல் வைக்கப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டனார். இது திட்டமிட்ட கொலை அல்ல எனவும் தற்செயலாய் நடந்ததோ, வேறு தரப்போ செய்து இருக்கலாம் என சொல்லப்பட்ட அந்த நேரத்தில் தான் அங்கிருந்த உதயன் பத்திரிகை நிருபர் சுகிர்தராஜனின் செத்தவீடு தீர்மானிக்கப்பட்டது. அவர் முதலில் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்களின் உடல் கிடந்த இடத்திற்கு சென்று காதினுள் வெடிவைத்து கொல்லப்பட்டதை துல்லியமாக படம் எடுத்து உதயனின் எழுதினார். இதற்கு பிறகு அந்த ஐந்து மாணவர்களின் செத்த வீடு மிகப் பெருமளவிலான ஜனத்திரளோடு நடந்தது. தொலைக்காட்சியும், இணையத்திலும் அந்த செத்த வீட்டு படங்களை நான் பார்த்து போது எந்த பயமும் இல்லாமல் இவ்வளவு சனங்கள் வந்திருக்கிறார்களே என்று நினைத்துக்கொண்டேன். நான் நினைத்துக் கொண்டது சரியாகியது இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுகிர்தராஜன் அடுத்து வந்த ஒரு செவ்வாய்க்கிழமையில் சுட்டுக்கொல்லப்பட்டார். பிறகு அவரின் செத்தவீடும்......


ஆகவே ஆயிரம் செத்தவீட்டுக் கதைகள் உண்டு நண்பர்களே. உங்களிடம் செத்தவீட்டுக் கதைகள் இருந்தால் சொல்லுங்கள். செத்தவீடுகளை பகிர்வோம். செத்தவீடுகளை தொடர்வோம். ஏனெனில் எங்களின் செத்தவீடும்.....

Saturday, July 28, 2007

மறுகரையில் யாழ்ப்பாணம்.


முதலில் அவனுக்கு ஏழாம் திருவிழாவாக தங்களின் திருவிழா வந்ததில் பெரிய கவலை இருந்தது. உபயகாரர் என்ற பெயருக்குள் அப்பாவின் பெயரும் வர திருவிழா தொடங்கியத்தில் இருந்து ஏழு நாட்கள் காத்திருக்க வேண்டி இருந்ததுதான் இதற்கு காரணம். பிறகுதான் ஏழாம் திருவிழாவை எடுத்தில் அப்பாவிற்கும், கந்தசாமி மாமாவுக்கு, கெங்காதரன் அப்பாப்பாவுக்கும் இருந்த புத்திசாலிதானத்தை நினைத்து அடிக்கடி வியந்து கொள்வான்.

முதலாம் திருவிழாவிற்கும் இராண்டாம் திருவிழாவிற்கும் இடையிலேயே எவ்வளவோ பெரிய வித்தியாசம் வரும் போது, முதலாம் திருவிழாவிற்கும் ஏழாம் திருவிழாவிற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தமால் அப்பாவும், கந்தசாமி மாமாவும், கெங்காதரன் அப்பாப்பாவும் ஓய்வதில்லை. முதலில் ஒவ்வொரு நாட்களுக்கிடையே இருக்கும் சூட்சுமத்தை அவனால் புரிந்துகொள்ள முடிவதில்லை. சாமி கோவிலை சுற்றி அவனின் வீட்டுக்கு முன்னால் வரும் போது நிறைகுடம் வைப்பதற்கான ஒழுங்கை அப்பாம்மாவுடன் சேர்ந்து செய்தால் சரியாக இருந்தது. பிறகு தங்கச்சி வளர்ந்து நிறைகுடம் வைக்கும் வேலையை எடுத்துக்கொண்ட பிறகுதான் அவன் சாமிக்கு பின்னால் வரத்தொடங்கினான். சாமி தூக்குவதென்றால் சும்மாவா..? அந்த திருவிழா உபயகாரர்களின் வளர்;ந்த மூத்த மகன்மார் தங்களின் கட்டுமஸ்தான உடம்பில் தங்கசங்கிலி புரள புரள வேர்த்து வடிய வடிய தூக்குவினம். எந்த கடும் வெயிலுக்குள்ளும் அவர்களது உடல் சோர்ந்து விடாது என்பதை ஊர் இளம் பெண்களுக்கு காட்டும் சுயம்வரமாக அது இருந்தது. அவனும் ஒரு சங்கிலி போட்டு இருந்தான். அம்மா திருவிழா தொடங்கின உடனயே அவனுக்கு ஒரு சிங்கப்பூர் முறுக்கு சங்கிலியும், அண்ணாவுக்கு கைச்செயினும் போட்டு விட்டாள்.

முதலாம் திருவிழா என்றால் அனேகமாக இரண்டு கூட்டு மேளம் தான் இருக்கும். பிறகு நாலாம் திருவிழா, ஐந்தாம் திருவிழாவிற்கெல்லாம் ஆறுகூட்டு, ஏழு கூட்டு மேளம் பிடிக்க வெளிக்கிட்டுவினம். எத்தனை கூட்டு மேளம், வேறு வேறு கலைநிகழ்ச்சி, சின்னமணி வாத்தியாரின் வில்லுப்பாட்டு, கம்பன் கழக ஜெயராஜின் சொற்பொழிவு என தங்களின் பலத்தை காட்ட உபயகாரர்கள் தங்களாலான சகல முயற்சிகளையும் செய்வினம். மேளகாரர்களை அனேகமாக தூர இடங்களில் இருந்துதான் பிடிச்சு வருவினம். முதல் நாளே வந்து உபயகாரர் ஏற்பாடு பண்ணின வீட்டில் மேளக்காரர்கள் இருக்க, உபயகாரர்களில் ஒருவர் இரவிரவாய் அவர்களுக்கு சாராயம் வாங்கவும், ஆட்டிறைச்சி வாங்கவும் ஓடுப்பட்டு திரிவார். நிறை வெறியில் ஒரு மேளகாரர் வேட்டி அவிழ அவிழ, கோவில் மடம் மட்டும் வந்ததை அவன் கண்டிருக்கிறான்.

மேளகாரர் வாசிக்க தொடங்கினவுடன் உபயகாரர்கள் தங்களுக்கு தெரிஞ்ச பாட்டுகளை ஒரு துண்டில் எழுதி தங்களின் கடைசி மகன்மாரை மேளகாரருக்கு பக்கத்தில் இருந்தி, விடுவினம். அவன்கள் சொல்லச் சொல்ல மேளக்காரர் அந்த பாட்டை வாசிப்பினம். பிறகு இளம்பெடியள் வட்டம் வடக்கு மூலையில் வைச்சு "ஸ்டைலு ஸ்டைலு தான்" பாட்டையோ "அந்த அரபிக்கடலோரத்தையோ" வாசிக்க சொல்ல, அவர்களும் நாதஸ்வரத்தினால் எச்சில் வடிய வடிய வாசிப்பார்கள். அவனுக்கு அதை பார்க்க பார்க்க பொல்லாத கோபம் வரும். ஆனால் அதையெல்லாம் ஈடுகட்ட கந்தசாமி மாமா திட்டம் போட்டிருவார். ஒரு முறை ஆறாம் திருவிழா முடியப்போகுது. விடிந்தால் ஏழாம் திருவிழா. ஒரு மேளகாரர் கூட வரவில்லை. அவனுக்கோ பெரிய வெட்கமாய் இருந்தது. கந்தசாமி மாமாவையும் காணேல்லை.

விடிஞ்சு போச்சு. திருவிழா தொடங்க போகுது. திடீரென்று ஒரு மொறிஸ் மைனர் கார் ஒன்று வந்து நின்றது. அப்பாவும் , கெங்காதரன் அப்பாப்பாவும் ஒரு நமட்டு சிரிப்பு சிரிச்சபடி காரை நோக்கி போச்சினம். காரில் இருந்து ஒருவர் இறங்கினார். உயரமான கொஞ்சம் ஒல்லியான, ஒருவர். நிறைய சங்கிலிகள் போட்டிருந்தார். வெறும் மேலில் ஒரு வெள்ளை சால்வை போட்டு மூடி இருந்தார். அவனும் ஓடிப்போய் அப்பாவுக்கு பக்கத்தில் நின்றான். காரில் இருந்து வந்தவரின் உதவியாளர்களும் இறங்கிச்சினம். அவர் வந்து நாதஸ்வரம் வாசிக்க தொடங்கிய அழகை எல்லாத்திருவிழாக்காரும் கூடி நின்று பார்த்தினம். அவரின் நாதஸ்வரத்திற்கு கீழ நீளத்திற்கு பல பதக்கங்கள் கொழுவி இருந்தது. அதில் நாதஸ்வரம் மாதிரியே ஒரு பதக்கம் தங்கநிறத்தில் மின்னியது இன்னமும் ஞாபகம் இருக்கு.
கடைசியாய் அவர் போவதற்கிடையில் அவரின் பெயர் பஞ்சாபிகேசன் என்று அப்பாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு தான் அவன் மற்ற உபயகாரர்களின் பெடியளை தேடினான். அவங்கள் எல்லாம் வெட்கத்தில் ஓடி ஒளிஞ்சிட்டாங்கள்.

எந்த வருட திருவிழாவிலும் ஏழாம் திருவிழா தான் வெல்லவதாய் இருந்தது. கம்பன் கழக ஜெயராஜ் வந்தார். வில்லுப்பாட்டு சிவமணி வாத்தியார் இப்படி இப்படி எல்லாம் புதுமையையும் ஏழாம் திருவிழாக்காரரே செய்தனார். ஆனால் கனமூர்த்தியும் பஞ்சமூர்த்தியும் தான் பெரிய தவில் நாதஸ்வரக்காரர்கள் என்று யாரோ சொன்னார். அவர்களின் கச்சேரியை பார்க்க அவன் தச்சன்தோப்பு பிள்ளையார் கோவில் வரை போக வேண்டி இருந்தது. அங்கும் கனமூர்த்தி வரவில்லை அவரது மகன் தட்சாணமூர்த்திதான் வந்திருந்தார். அவன் கந்தசாமி மாமாவை கனமூர்த்தி பஞ்சமூர்த்தியை தங்களின் திருவிழாவுக்கு கூப்பிட வேண்டுமென்று கெஞ்சினான். அவர்தான் இந்த முறை தச்சன்தோப்புக்காரங்கள் கூப்பிட படியால் அடுத்தவருடம் கூப்பிடுவம் என்றார். அதற்கு பதிலா அந்த திருவிழாவை ஒரு கலக்கு கலக்க கந்தசாமி மாமா முடிவெடுத்தார். அப்பா, கந்தசாமி மாமா, ராஜன் மாமா, கெங்காதரன் அப்பாப்பா என்று எல்லாரும் கூடி கன நேரமாய் ஏதோ கதைத்தனர். பிறகு ராஜன் மாமாவும், கந்தசாமி மாமாவும் அவரின் சாளி மோட்டார் சைக்கிளில் எங்கோ வெளிக்கிட்டு போச்சினம்.

பிறகு அடுத்த நாள் கந்தசாமி மாமா சிரித்த முகத்துடன் வந்தார். வரும் போதே கை நிறைய நோட்டிசும் கொண்டே வந்தார். அது கன கலர்களில் இருந்தது. நோட்டிசில் வசனம் இப்படி இருந்தது.

வருடா வருட உங்கள் முன் பல நிகழ்ச்சிகளை மேடையேற்றி வந்த ஏழாம் திருவிழா உபயகாரர்கள் இந்த வருடம் ஈழத்தின் புகழ்பெற்ற இசைக்குழுவினரான ஈழநல்லூர் அருணா இசைக்குழுவினரை உங்கள் முன் அழைத்து வருகின்றனார்.

பிறகென்ன ஏழாம் திருவிழா பெடியங்களுக்கு சந்தோசம் பொங்கி வழிந்தது. நோட்டிசை இரவு பகல் பார்க்கமால் எல்லா சுவரிலும் ஒட்டினார்கள். அவனின் வீடு றோட்டு கரையோரம் இருந்ததால் கூட்டம் கூட்டமாய் ஆக்கள் போகும் போது பலகணியில் இருந்தும் நோட்டிசுகளை தூவினான். அவனுக்கு முதல் இபபடி நோட்டிசை உயரத்தில் இருந்து வீசும் உத்தியை செய்தது என்றால் அது இரண்டு மூன்று கெலிகாப்டர் தான். அந்த நோட்சுகள் இரண்டு நிறத்தில் இருந்தன. ஒன்று சிவப்பில். மற்றது நிறமெதுவும் இல்லாமல் வெள்ளையாய். அந்த நோட்டிசை அடிச்சு பிடிச்சு வயல்வெளியெல்லாம் ஓடிப் பொறுக்கினதும் அதில் இருந்த வசனமும் நல்ல ஞாபகம் இருக்கு. அந்த நோட்டிசில் வசனம் இப்படி இருந்தது.

"பாரத பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த பிரபாகரனின் தலைக்கு 10 லட்சம் சன்மானம்" என்று இருந்தது.

நல்ல வேளை கந்தசாமி மாமா அந்த நோட்டிசை பார்க்கேல்ல போல இருக்கு. இல்லையேன்றால் அருணா இசைக்குழுவை பார்க்க வருபவர்களுக்கு தலைக்கு 10 ரூபா தருவதாக நோட்டிசு அடித்து விட்டிருப்பார்.

ஏழாம் திருவிழா முடிந்து இரவாகி விட்டது. அருணா இசைக்குழுவை பார்க்க ஆட்கள் எல்லாம் பக்கத்து ஊர் ஆட்கள் எல்லாம் வந்து குவியத் தொடங்கினார். யாரோ ஓடி வந்து கந்தசாமி மாமாவிடம் நளச்சனமெல்லாம் வந்திருப்பதாகவும் இசைக்குழு வரவிட்டால் பெரிய அவமானமாக போகும் என்றும் புறுபுறுத்து கொண்டு நின்றனார். கந்தசாமி மாமா குட்டி போட்ட பூனை போல கோவிலுக்கு பின்னால் சுற்றுவதும் றோட்டை பார்ப்பதுமாக நின்றார். முதல் திருவிழாகாரர் போடப்பட்ட மேடைக்கு முன்னால் நின்று விசில் அடிக்க வெளிக்கிட்டார்கள். அவனுக்கும் வெட்கமாய் இருந்ததால் ஓடி வந்து வீட்டில் நின்று கோவிலடியை பார்த்துக்கொண்டு நின்றான். கடைசியாய் இரவு பன்னிரண்டு மணியாகப் போற நேரத்தில் ஒருவர் மோட்டார் சைக்கில் வந்து கந்தசாமி மாமாவிடம் ஆமி யாழ்ப்பாணத்தை நோக்கி வருதாகவும் ஆனதால் அருணா இசைக்குழு வர முடியாமால் இடம்பெயர்வதாகவும் சொல்லி விட்டு போனார். பிறகு அப்பா, கந்தசாமி மாமா, கெங்காதரன் அப்பாப்பா எல்லாம் மளமளவென்று வீட்டுக்கு வந்துவிட்டனர். இசைக்குழு நடக்காது என்று அறிவிக்க சொல்லி துவாரகப்பெரியப்பாவிடம் சொல்ல அவரும் ரூபாவாகினி வி. என். மதியழகனை தோற்கடிக்கும் நோக்கோடு அறிவிப்பு செய்ய, கூடியிருந்த கூட்டம் பெரும் விசிலடிப்போடு கலைந்து போனது.

அதுதான் ஊரில் அவன் இருந்த கடைசி திருவிழா. திருவிழா மேளச்சத்தங்கள் ஓயு முன்பே யாழ்ப்பாணத்தில் இருந்து குண்டு சத்தங்கள் பெரிது பெரிது கேட்க தொடங்கியது. ஏராளமான எறிகணை தலைக்கு மேலால் போய் கொண்டிருந்தது. ஓரிரண்டு அருகில் வீழ்ந்து வெடித்தது. வல்லிபுர வாத்தியார் வீட்டுக் கிணற்றடியில் எறிகணை வீழந்து துலா முறிந்து றோட்டில் கிடந்தது. அதனால் அவர் ரியூசன் கொடுப்பதை நிறுத்தி கொண்டார். அன்றிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்கள் வெளிக்கிட்டு கிளாலியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆட்கள் இல்லா வீடுகளில் இயக்கம் வந்து இருக்க தொடங்கியது. மீகுதி வீடுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் வலிகாமத்திலும் இருந்து வந்தவர்கள் இருக்க தொடங்கினார்கள். அவர்களிடம் எப்படி இடம்பெயர்ந்து வந்தார்கள்? என்பதை இருக்கும் ஊர்காரர்கள் கேட்டறிவதை ஒரு பகுதி நேர தொழிலாக செய்து வந்தார்கள். அவர்களும் அந்த கதைகளை சொல்லி முடிப்பதற்குள் சத்தம் ஊரையும் நெருங்கி விட்டது.

அவனின் வீட்டை இயக்கம் காயமடைந்த போராளிகளிற்கு சிகிச்சை அளிக்கும் இடமாக மாற்றியது. அப்பாம்மாதான் அந்த வீட்டிற்குள் நளப்பெடியங்களையும் , பெட்டைகளையும் கொண்டு வருதாக சொல்லிக்கொண்டு இருந்தா. இயக்க வாகனங்கள் அடிக்கடி வீட்டிற்கு முன்னால் நிற்பதால் பொம்பர் வீட்டில் மேல குண்டு போடப்போகுது என்றும் கவலைப்பட்டா.

போஸ்ட் மாஸ்ரர் வீட்டில் இருந்த பெண் போராளிகள் குழுவை சேர்ந்தவர்களில் ஒருத்தி அவனுக்கு பழக்கமானாள். இவனுக்கு மாமா வாங்கித் தந்த முத்திரை அல்பத்தினை அவளுக்கு காட்டினான். அவள் அடுத்த நாள் கொஞ்ச முத்திரைகளையும் , ஒரு கண்ணாடிப்போத்தலுக்குள் பழசரமும் கொண்டு வந்து கொடுத்து விட்டு யாழ்ப்பாண சண்டைக்கு போறம். பேப்பரை பாருங்கோ வீரச்சாவு என்று படம் வரும் என்று சொல்லி விட்டு சென்றாள். அப்பாம்மா அந்த பழரசத்தை குடிக்க கூடாது என்றும் உவங்கள் துப்பரவில்லமால் செய்து இருப்பங்கள் என்றும் சொன்னா.

வீட்டுக்கு நாளாந்தம் வரும் காயமடைந்த போராளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சத்தமும் ஊரை நெருங்கியது. சாமி தூக்கின பெடியளில் கொஞ்சமும், அருணா இசைக்குழு பார்க்க வந்த நளபெடியளும் இயக்கத்திற்கு போனார்கள். எஞ்சிய சாமி தூக்கியவர்கள் வெளிநாட்டுக்கு போனார்கள். கம்பன் கழக ஜெயராஜ் கொழும்பில் சொற்பொழிவு ஆற்ற தொடங்கியிருந்தார், ராஜன் மாமா கொழும்புக்கு இடம்மாற்றம் எடுக்க அலுவல் பார்ப்பதாக சொன்னார். கந்தசாமி மாமாவிற்கோ என்ன நடந்தது என்று அவனுக்கு யாரும் சொல்லவில்லை. கோவியில் பூசை வைக்க கூட ஐயர் இல்லை.

மூத்த மாமா வந்து அவனைக் கூட்டிக்கொண்டு போனார். கிளாலி கரையெல்லாம் சனத்தால் நிரப்பி வழிந்தது. நடுக்கடலில் கெலிகாப்டர் தாழப்பதிந்து சூட்டுக்கொண்டிப்பதை அடிக்கடி பார்க்க கூடியதாக இருந்தது. மூன்றாவது நாள் ஒரு படகில் ஏறி போகும் போது, கரையெல்லாம் யாழ்ப்பாணத்தார் கட்டிக்காத்த பொருட்களெல்லாம் சிதறிக்கிடந்தது. சன கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கரையிலேயே போட்டு வள்ளம் கிடைத்தால் போதுமென்றிருந்தனர். கடலில் பயணப்பொதிகளும், உடைகளும் இன்ன பிற பொருட்களும் மிதந்தன. மறுகரையில் வந்து இறங்கிய போது தட்சணாமூர்த்தியும், பஞ்சமூர்த்தியும் வந்த போட்டை கெலி சூட்டதாகவும் பஞ்சமூர்த்தியின் தவில் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதாகவும் யாரோ சொன்னார்கள். அது உண்மையோ பொய்யோ என்று தெரியாது. ஆனால் அவன் கிளாலி இக்கரையை விட்டு கடக்கும் வரை அக்கரையில் இருகூட்டு மேளம் வாசித்து கேட்டது. டும் டும் பீப்பி

Wednesday, July 25, 2007

கொலை தொடங்கும் நாள்.


திடீரென்று ஒரு நாள் அனைவரையும்
சுற்றியும் வட்டங்கள் வளர்ந்தன.
அவை அவர்களை சுற்றியும், அவர்கள்
தலையின் பின்னாலும் வேறு இருந்தன.

வட்டங்களை அவர்கள்தான் முதலில்
வளர்த்தார்கள்.
பிறகொருநாள் அவை தானாகவே வளர ஆரம்பித்தன.
என்னவோ போங்கள்,
பின்னர் அவை சிறிதெனவும் பெரியதெனவும்
ஒன்றன் பின் ஒன்றாக பூமியின் தரையெங்கும் படர்ந்தன.
அவற்றை அவர்கள் எவரும் வட்டங்கள்
என ஏற்றுக்கொள்ளவில்லை.
சிலர் அதை சதுரம் என்றனர்.
சிலர் அதை முக்கோணம் என்றனர்.
சிலர் அதை அடி முடியறியா சிவனின் உருவம் என்றனர்.

என் காலடிகளுக்கிடையே தோன்றும் அசூயை
ஒன்றின் பொழுதுதான் நான்
வட்டங்கள் இடைவெட்டும் தொடை ஒன்றில் நிற்கக்
கண்டேன்.
அவற்றில் இருந்து என்னை விடுத்து
வர நான் ஓடிய போதும் அவற்றின்
ஓரங்களை கூட என்னால் தாண்ட முடியவில்லை.

அவரவர் வட்டங்கள் பெருத்து என்னை
சுற்றிச் சுற்றி வந்த போது
விளக்கமறியா ஒரு புதிர் கணக்கு
என் உயிர் திருகக்
கண்டேன்.

நான் வட்டங்களை விடுத்து
வெளியே வர அவற்றை கொலை செய்ய
தீர்மானித்த பொழுதொன்றில்,
என்னை மையமென கொண்டு புறப்பட்ட வட்டம் பலரின் வட்டங்களை இடை
வெட்டுவதை கண்டேன்.

26.07.2007
அதிகாலை 5.08

Saturday, July 14, 2007

சொல்லி வேலை இல்லை




எனக்கு சில சிங்கள வார்த்தைகள் தெரிந்திருந்தது. அந்த வார்த்தைகளை எனக்கு இப்போதும் மறக்க முடிவதில்லை. நண்பர்கள் மத்தியிலும் அத்துடன் கொஞ்சம் சிங்களம் தெரிந்தவர்களை சமாளிக்கவும் "நம மொக்கத்த" (பெயர் என்ன)"கொய்யத என்னே" (எங்க போறாய்)"வேளவ கியத ( என்ன நேரம்)போன்ற வார்த்தைகள் பயன்படுத்தினேன். இதனை விட இன்னும் கொஞ்சத்தை கேள்வி பதிலாக தெரிந்தது வைத்திருந்தேன். வீதிச் சோதனை இராணுவத்தின் நாளாந்த நேர்முக தேர்வு அது




கேள்வி – "ஒயட்ட சிங்கள கத்தக்கரட்ட புளுவங்"? (உன்னால சிங்களம் கதைக்க முடியுமா?)பதில் "டிக்க டிக்க தன்னவ" (கொஞ்சம் கொஞ்சம் தெரியும்)
இதற்கு பிறகு அந்த சிப்பாய் தொடரான சிங்களத்தில் எதுவும் கேட்டால் "மாம சிங்களம் தன்ன நாய "(எனக்கு சிங்களம் தெரியாது) என்றும் பிறகு ஆங்கிலத்தில் i am student என்றெல்லாம் சொல்லி பாடசாலை நேரத்திற்கு முந்தியோ பிந்தியோ போய் சேர்வது அவரவர் கெட்டித்தனம்.

அந்த வார்த்ததைகளில் எனக்கு "கியலா வடக் நாய" என்ற வார்த்தைதான் அதிகம் பிடித்திருநதது. தமிழில் அந்த மாதிரி, செம சுப்பர் என்னும் வார்த்தைகளுக்கு நிகரான அதற்கு "சொல்லி வேலை இல்லை" தமிழில் பொருள் வரலாம் என்றான் கமகே.

கமகே தான் இந்த எல்லாம் சிங்கள வார்த்தைகளையும் எனக்கு சொல்லித் தந்தது. அதை விடவும் எக்காய் , தெக்காய் , துணாய், கத்தராய் பகாய், என்று இலக்கங்களை ஐம்பது வரையும் சொல்லி தந்தான்.

கமகே அந்த பெரிய ஆங்கிலேயே காலத்தில் கட்டப்பட்ட அரசு பங்களாவின் சமையல்காரனாய் இருந்;தான். அந்த மாவட்டத்திற்கு அடுத்தது சிங்கள மாவட்டம் என்பதால் இங்கும் அதிகம் தமிழ் தெரிந்த சிங்களவர்களே வேலை பார்த்தார்கள். ஓட்டுனராய், சமையல்காரர்களாய், பொலிஸ்காரார்களாய் எல்லாம் சிங்களவர்களும் இருந்தார்கள்.

அந்த அரசு விடுதிக்கு நான் வந்ததிலிருந்து பிறகு அதை விட்டு போகும் வரை சமையல்காரனாய் கமகே இருந்தான். அவனை தவிர அந்த அரசு விடுதியின் ஊழியர்களில் ஓட்டுனராய் இருந்த ஜெயசிறிதான் சிங்களவர். இதை விட நூழைவாயிலில் நின்றிருந்த பொலிஸ்காரர்களில் சிங்களவர்களும் தமிழர்களும், முஸ்லிம்களும் இருந்தனர். ஆனால் அவர்கள் அடிக்கடி மாறி மாறி அந்த மாவட்ட பொலிஸ் நிலையத்தினால் விடப்படும் ஒழுங்கிற்கு ஏற்ப வந்து கொண்டிப்பதால் அவர்களை எனக்கு பழக்கம் இருந்ததில்லை.

ஜெயசிறி கூட சிவசுந்தரம் மாமா இல்லாத வேளைகளில் தற்காலிக ஓட்டுனராய் தான் வந்தார். ஆனால் ஜெயசிறியையும் மறக்க முடியாது இருந்தது. அந்த அரசு பங்களா அமைந்திருந்த காணி அரைவாசிக்கு மேல் காடு பிடித்து கிடந்தது. அதில் இருக்கும் மரங்ளை குரங்களை தங்கிடமாக மாற்றிக் கொண்டன. அந்த காணியின் ஓரத்தின் ஒரு சிறிய அறை இருந்தது. அந்த அறையை காணியை பாரமரிப்பதற்கான மண்வெட்டி, கோடாலி என்று இன்ன பிற பொருட்கள் நிறைந்து கிடந்தன. ஆனால் அந்த அறையின் கதவு திறபடும் இடத்தின் உட்பக்கமாக பெரிய கருங்குளவிக் கூடு இருந்தது. அது நாளாக நாளாக பெரிந்தாக வளர்ந்து விட்டதால் அந்த அறையை யாரும் திறப்பது இல்லை. வெளியே எடுத்த பொருட்ளை வைத்தே காணிப்பராமரிப்பை சமாளித்து கொண்டு இருந்தனர். இதற்கு பிறகு ஒரு நாள் கிணறு இறைக்க ஒரு நீளமான கயிறு தேவைப்படுவதாக சொன்ன போது ஜெயசிறி திறப்பை எடுத்துக்கொண்டு அறையை நோக்கி போனார். நான் மாமியிடம் கூட சொன்னேன். மாமி ஜெயசிறிக்கு அந்த குளவிக் கூடு இருப்பது தெரியாது என நினைத்து அவரை கூப்பிட்டு சொன்ன போதும் அவர் பாராவயில்லை நோனா என்று சொன்னபடி போய் கதவை திறந்து கயிறை எடுத்து கொடுத்து விட்டு கதவை திறப்பி பூட்டி விட்டு போய் விட்டார். ஜெயசிறி வெள்ளை வேட்டி கட்டிக்கொள்பவராகவும் கமகே சரம் கட்டுபவனாகவும் ஜெயசிறி ஓய்வெடுக்கும் வயதை அண்டிவராகவும் கமகே நடுத்தர வயதுகாரனாகவும் காணப்பட்டதுதான் மேலதிகமாக இருவருக்கும் உள்ள வித்தியாசம். இதுதான் ஜெயசிறியை பற்றி எனக்கு நினைவில் நிற்பது. ஆனால் கமகே அப்படியெல்ல.




பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வீட்டுக்கு வந்து சமையறைக்கு போய் விடுவது எனது வழக்கம். கமகே இரவு சாப்பாட்டுக்குரிய மரக்கறியை வெட்டிய படி அந்த மரக்கறியின் சிங்கள பெயரை சொல்லித் தருவான். அப்போது மாமாவும் மாமியின் சாய்பாபாவின் பக்தர்களாய் இருந்தார்கள். நானும் அவர்களை போலவே இருந்தேன். முதலில் நான் வியாழக்கிழமையில் மாமிசம் சாப்பிடுவதை தவிர்த்தேன் . பின் வாரம் முழுதுமே மாமிசம் சாப்பிடுவதை தவிர்த்தேன். இந்த சாய்பாபா பிரச்சனையை கமகேக்கும் தெரிந்தே இருந்தது. ஒரு நாள் கமகே ஒரு மந்திரம் ஒன்று போட்டுக்காட்டுவதாக எனக்கு சொன்னான். பின்பு எந்த சேதராமும் இல்லாத முழு உருளைக்கிழங்கை எடுத்து முதுகிற்கு பின்னால் வைத்து கொண்டு சாய்பாபா சாய்பாபா என்று கண்களை மூடி சொன்னபடியே இரு கையிலும் உருளைக்கிழங்கை சரிபாதியாக எடுத்து காட்டினான். நானும் உருளைக்கிழங்களை வாங்கி பார்த்தேன். அது அழுத்தம் திருத்தமாக வெட்டிப்பட்டு இருந்தது. நானும் எப்படியெல்லாம் இது நடந்திருக்க கூடும் என யோசித்துப் பார்த்து திருப்பி திருப்பி அவனை செய்து காட்ட சொன்ன போதுஇ அவன் அன்றைய சமையலுக்கு உரிய உருளைக்கிழங்கையெல்லாம் எனக்கு மந்திரம் போட்டே அறுத்து முடிந்தான். இதற்கு பிறகே திடீரென்று எனக்கு கமகேயை பிடித்து போனது.




கமகேயின் பெற்றோர்கள் நுவரெலியாவில் இருந்தனர். வவுனியாவில் ஒரு சிங்கள பெண்ணை காதலித்து கல்யாணம் முடிந்து இருப்பதாகவும் சொல்லி எனக்கும் ஒருநாள் படம் கொண்டு வந்து காட்டினான்.

கமகே பைத்தியமாக இருந்த விசயங்களில் ஒன்று லொட்டரி ரிக்கற் . அவன் தனது சம்பளத்தில் பெரும்பாலானவற்றை லொட்டறி ரிக்கற்றை வாங்குவதற்கே செலவு செய்தான். கமகேயை எனக்கு பிடித்து போனப் பிறகு அவனுக்காக அவன் வாங்கும் மகஜன சம்பந்த லொடடறி ரிக்கற்றின் அதிஸ்ர எண்களை ஒவ்வொரு சனிக்கிழமையும் தொலைக்காட்சியில் பார்த்து சொன்னேன். நான் பார்த்து சொன்ன பிறகு அனேகமான இலக்கங்கள் லைக்காட்சியில் வந்ததற்கும் கமகேயின் ரிக்கற்றுக்கும் பொருந்தி வந்தாலும் கடைசி இரண்டு மூன்று இலக்கங்கள் பிழைத்து போய் அவன் கோடீஸ்வரன் ஆகமால் போனான். இருந்தாலும் கமகே என்னால் என்றோ ஒரு நாள் அதிஸ்ரம் வரும் என நம்பினான். அதை நிரூபிப்பது போல் ஒரு சம்பவமும் நடந்தது.

நான் கொழுத்து போக தொடங்கியதில் இருந்துஇ மாமி என்னை பாடசாலைக்கு நடந்து போகச் சொன்னா. நானும் சில நாளாக நடந்து போய் பூட்டப்பட்ட பாடசாலைக்கதவிற்கு முன்னால் நின்று யோசித்தேன். ஓரிரு நாட்கள் கழித்து கமகே அந்த வழியால் அன்றைய சமையலுக்கு உரிய மரக்கறி வாங்க சைக்களில் வந்தான். நான் அவனை கண்டு விடவே என்னை பள்ளிக்கூடம் கொண்டு விடுமாறு கேட்டேன். அவனும் சரியான ஏற்றிக்கொண்டுஇ வழியில் புதிதாய் அறிமுகமாகி இருந்த மங்கி மஜிக் என்ற சுரண்டல் ரிட்டற் வாங்க என்று நிறுத்தினான். அந்த ரிக்கற் இலங்கை தேசிய லொத்தர் சபையால் அறிமுகப்படுத்தப்பட்டு சில நாட்களாகதான் ரிவியில் விளம்பரம் போய் கொண்டு இருந்தது. என்னை கொண்டே ரிக்கற்றை எடுப்பித்து சுரண்டியதில் 150 ரூபா விழுந்தது. அதற்கு பிறகே அவன் என்னை பெரிதும் அதிஸ்ரம் வாய்த்தவன் என்று சொல்ல ஆரம்பித்தான். பிறகு கமகேக்கும் எனக்கு ஒரு ஒப்பந்தம் வந்தது.

கமகே ஒன்றுவிட்ட ஒரு நாள்தான் மரக்கறி வாங்க வருவான் அந்த நாளில் என்னைக் கொண்டு போய் பாடசாலையில் விடவேண்டும் என்றும் பதிலாக நான் சுரண்டல் ரிக்கற்றை அவனுக்காக எடுத்து இவனை அதிஸ்ரத்தில் விழுத்துவது என்றும் முடிவானது. இதற்கு பிறகு அந்த ஒன்று விட்ட ஒரு நாள் நடந்து போவதை ஈடு செய்வதை கூட நான் கண்டு பிடித்து இன்னொரு திட்டம் தீட்டினேன். நாளாந்தம் மாமி தரும் டிபன் பொக்சை மேசையில் விட்டுவிட்டு போகவே மாமி அதை பார்த்து கமகேயிடம் கொடுத்து விட பிறகு அப்படியே சைக்கிளில் ஏறிப்போனேன். இதற்கு கூட கமகே ஒத்துழைத்தான். ஆனால் எனக்குக்கு தெரிந்த வரை கமகேக்கு அந்த 150 ரூபாவை விட வேற எதுவும் நான் விழுத்திக் கொடுத்தாக ஞாபகம் இல்லா விட்டாலும் கமகே கடைசி வரை அதை சுரண்டுவதை விடவில்லை என்பது ஞாபகத்தில் இருந்தது.




இந்த லொட்டறி ரிக்கற்றை விட அடுத்தாக அவனுக்கு ஆர்வம் இருந்தது மின்னியல் பொருட்களில். சில வேளை அவன் தனது புது மனைவிக்கு இப்படியான ரிவி இ டெக் போன்றவற்றை வாங்கி கொடுக்க நினைத்தனோ என்னவோ. மாமி விற்க இருக்கும் பொருட்களின் விபரத்தை அறிந்து தான் தவணை முறையில் காசு தருவதாகவும் நோனா வேற யாருக்கும் அதை விற்க கூடாது என்றும் கூறி மெல்ல மெல்ல ரிவி , டெக் வாங்கினான். பிறகு அதற்கு வயர் தேடுவதற்காக எல்லோரும் திறக்க பயந்து கடைசியில் ஜெயசிறி திறந்த அறைக்குள் இரவில் போய் குளவி கூட்டை கொழுத்தினான். அங்கிருந்த சின்ன சின்ன வயர்களை எடுத்து முடித்து பெரிய வயர் ஆக்கினான். பிறகு அதற்கு இருக்கும் பழைய கார் பட்டறியை எடுக்கவா? என்று நோனாவை கேட்டுச் சொல்லச் சொன்னான். இப்படியே அந்த பட்டறியிலே மாமியில் இருந்து வாங்கிய ரிவி டெக்கில் எனக்கு படம் போட்டு காட்டினான். பிறகு தான் லீவில் போகப் போவதாகவும் இவற்றை தனது மனைவிக்கு கொடுக்கப்போவதாகவும், நுவரெலியாவுக்கு அம்மே தாத்தே (அம்மா , அப்பா) யிடம் போகப்போவதாக சொல்லி போனான். பல நாட்கள் கழித்து வந்தான். வரும் போது நிறைய பழங்கள், கறுவா,தேயிலை எல்லாம் கொண்டு வந்தான். நான் அவ்வளவு மொத்தமும் நீளமுமான கறுவா பட்டையை கண்டதில்லை. தங்களது வீட்டு கறுவா அது என்று சொன்னான். நான் ஒரு பெரிய பட்டையை உறைக்க உறைக்க நாக்கால் வீணீர் வடிய வடிய சாப்பிட்டேன். தேயிலையையும், பழங்களையும் மிகுதி கறுவா பட்டைகளையும் நோனாவிடம் கொடுத்தான்.




அவனுடனேயே எனது மூன்று வருடங்கள் கழிந்தன. அவன் கணபதி தெய்யோ என பிள்ளையாரை கும்பிட்டான். இன்னும் பல மந்திரங்களை எனக்கு போட்டுக்காட்டினான். ஐந்து ரூபா குற்றியை தான் கையில் இருந்து மறையச் செய்தான். தான் கையில் பதினாரு விரல் இருப்பதாக சொல்லி எண்ணிக் காட்டினான். மறுகணமே பத்து விரல் தான் இருக்கிறது என காட்டினான். ஏராளமான சுரண்டல் ரிக்கற்றுகளை வாங்கினான். மாமியிடம் இருந்து குளிர்சாதன பெட்டி இ அயன் பொக்ஸை தவணை முறையில் வாங்கினான். தனக்கு பிறந்த பிள்ளையின் புகைப்படத்தை கொண்டு வந்து காட்டினான்.

மூன்று வருடங்கள் கழிந்த பின் அதாவது எனது ஐந்தாம் வகுப்பில் மாமாவுக்கு இடமாற்றம் கிடைத்தது. என்னை கூட்டிப்போக அப்பா அம்மா வந்தார்கள். கமகேயும் எங்களை பேருந்து நிலையம் மட்டும் வந்து அனுப்பி வைத்தான். பிறகு அவனும் தனது இடம் மாற்றம் பெற்று நுவரெலியாவுக்கே போகப் போவதாக சொன்னான்.

அதற்கு பிறகு சில வருடங்கள் கழிந்தன. யுத்தங்கள் இடப்பெயர்வுகள் என கழித்து வவுனியா ரவுணில் கவிதா புத்த நிலையத்திற்கு முன்பாக நின்ற போது எனது பெயரை சொல்லி யாரோ கூப்பிடுவது போல் இருந்தது. அங்கே ஒரு சைக்கிளில் கமகே நின்றிருந்தான். நிறைய தாடி வளர்ந்திருந்தான். தான் கச்சேரி வேலையை விட்டுவிட்டதாகவும் நுவரெலியாவில் தான் இப்போது தோட்டம் செய்வதாகவும் மனைவின் உறவினர்களை பார்க்க வவுனியா வந்தாகவும் சொன்னான். அன்றைக்கு பிறகு அவனை காணக்கிடைக்க வில்லை.

பிறகு மீண்டும் யுத்தம், இடப்பெயர்வு, மரணங்கள் என நானும் கடல் கடந்து தூரமாகி போனேன். எனது நண்பர்கள் what about sri lanka ? என கேட்கும் போது "கியலா வடக் நாய" என்பேன் சிரித்தபடியே..

Tuesday, November 07, 2006

சில நேரங்களும் சில படங்களும்

அண்மையில் லிவிங் ஸ்மைலின் பதிவினை பார்த்த போது நம் ஊரிலும் 98 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை அரசின் பொருளாதார தடையால், மருந்து தடையால் செத்து போன ஏராளமான மனிதர்களின் ஞாபகம் வந்தது. இந்த படம் அதே வருடம் நவம்பர் மாதம் கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்து உலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது.

இந்த படத்தை பெருமாள் கணேசன் என்னும் ஆங்கில ஆசிரியர் ஒருவர் எடுத்திருந்தார். படம் பிடிக்கப்பட்ட சிறிது நாட்களிலே அந்த குழந்தை இறந்து விட்டதாகவும், இடம்பெயர்ந்து வன்னியின் ஸ்கந்தபுரம் என்னும் இடத்தில் வசித்த குழந்தை அது எனவும் குறிப்பிட்டு இருந்தார். இலங்கை அரசின் இறுக்கமான செய்தி தணிக்கைக்கு மத்தியில் வெளியுலகத்தில் அந்த காலப்பகுதியில் வெளிவந்த ஒரே ஒரு புகைப்படம் இது.


இந்த படத்தை தான் அந்த காலப்பகுதியில் வெளிவந்த புத்தகங்கள், வெளியீடுகள், பத்திரிகைகள் எல்லாம் வெளியீட்டு இருந்தன.


இது கிழக்கு பல்கலைக்கழகம் வெளியிட்ட கலண்டர்.

கூடவே இன்னும் கொஞ்சப்படங்கள்.