Monday, September 18, 2006

வழக்கொன்றின் முடிவு


காலம் கனிகிறது
தூக்கு கயிறுகளும்
துண்டாடும் கோடாரியும்
கல்லறைகளும் தயாராக
காலம் கனிகிறது


தீர்ப்புக்காய் காத்திருந்த
வழக்குகள் வருகின்றன.
நாறும் புழுக்கடைந்த பிணங்களும்
சாட்சிகளாய் வர
காலம் கனிகின்றது

இருளோடு குமட்டும் மணமெடுத்து
பட்டமரம் தன்னில் குடிக்கும்
இரத்தம் குடியிருக்கும் வெளவால்களும்
வெள்ளைச்சேலை ராணியின்
பச்சைமுக ஏவல்பேய்களும்
ஒழிக

நெரியுண்டு புதையுண்டு
எரிந்தழிந்து போனதெல்லாம்
மறுபடியும் விளைந்தெழுக
என்றது தீர்ப்பு.

நீதி தேவர்கள்
வழங்கிய தீர்ப்பின்
வரிகளால் இருளுண்ட நகரம்
வெளிப்படைகின்றது

இருளடைந்த நகரில் வெள்ளரசு
மரத்தில் குடியிருக்கும்
கோலியாத்தின் நண்பர்களே
உங்களுக்காய் தூக்குகயிறுகளும்
தூண்டாடும் கோடாரியும்
கல்லறைகளும் தயாராகின்றது.

வெளிச்சம் கலை இலக்கியம் இதழ் 2000