
வீதியெங்கும் அலைந்து திரியும்
நிழலுருக்களில்
நீயும் இருப்பதாய்
தோன்றுகின்றதெனக்கு,
உன்
அழுத்தமான
முத்தத்தின் ஈரம்
இன்னமும் காய்ந்திருக்காது
உன் மருமகளின் கன்னங்களில்.
நீ
மூச்சு முட்ட முட்ட
இறுக்கி அணைக்கும் ஈர ஸ்பரிசம்
அவளுக்கினிமேல்
எப்போதுமிருக்காது.....
அக்காவின் விறைத்த கைகள்
பெற்ற மடமடத்த யூரோத்தாள்களின்
இசைக்கருவியை இசைக்கவும்
இனியாரும் கிடையாது
உன்
கல்லறை தடவுகையில்
நாதமெழுவதாய்
கனவிலிருக்கிறது
காற்று,.....
தன்னை எடுத்து பிசைந்து
மெட்டமைக்கும் கனவுக்கு
ஆளில்லை என நாதியற்று கிடக்கிறது.
நேற்றைய பொழுதில் தவறவிடப்பட்ட
உன் கையசைப்பை
நினைத்தபடியே
வீதியோரம் நிற்கின்றேன்.
இனி எந்த கையசைப்பையும் தவற
விடுவதில்லையென
கைகளை உயர உயர தூக்கி
அசைத்த படியே....
சில நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளரான எனது நண்பன் யுத்தக்களமொன்றில் இறந்த பின் எழுதியது...
நிலவன்
6 comments:
// சில நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளரான எனது நண்பன் யுத்தக்களமொன்றில் இறந்த பின் எழுதியது... //
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
: (
//எனது ஆழ்ந்த அனுதாபங்கள்/
தூப்பாக்கி குண்டுக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை தானே அவன் ஒரு இசையமைப்பாளன் என்று...என்ன சோகம் என்றால் லிவிங் ஸ்மைல் அதன் பிறகு சில நாட்களிலேயே அவனது உதவி இசையமைப்பாளனும் அதே களத்தில் மரணமடைந்தான்
வணக்கம் நிலவன்,
சோகம் கோர்த்தெடுத்த கவிதை, நண்பனின் பிரிவைச் சொல்லி மனதை இன்னும் கனக்க வைத்துவிட்டீர்கள்.
நிலவன்,
உன் கல்லறை தடவுகையில்
நாதமெழுவதாய்
கனவிலிருக்கிறது காற்று…
என்ற வரிகளில் சோகம் கவியும் ஒரு காட்சிப்படுத்தல் இருக்கிறது. மரணம் உலவும் பூமிதானெனினும் உயிர் இருப்பதும் உங்கள் இடத்தில்தான். தொடர்ந்து எழுதுங்கள். பின்னூட்டங்கள் அற்றவை தரமற்றவை என்று யார் சொன்னது உங்களிடத்தில்.
கானா பிரபா,
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
//உன் கல்லறை தடவுகையில்
நாதமெழுவதாய்
கனவிலிருக்கிறது காற்று…
என்ற வரிகளில் சோகம் கவியும் ஒரு காட்சிப்படுத்தல் இருக்கிறது. மரணம் உலவும் பூமிதானெனினும் உயிர் இருப்பதும் உங்கள் இடத்தில்தான். தொடர்ந்து எழுதுங்கள்.//
தமிழ்நதி,
கற்பனைக்கு இடமின்றி சிலவேளைகளில் காட்சியே நல்ல கவிதைக்கு காரணமாகிவிடுகின்றது. பாராட்டுக்கு நன்றி தமிழ்நதி
Post a Comment