Sunday, August 05, 2007

செத்த வீடுகளை பகிர்வோம்.

(இதுதான் அந்த திருமலை செத்தவீடு)

சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்த ஒரு கொலையும், அதன் பின்னான இறுதி நிகழ்வுகளின் படங்களையும் பார்த்தது பல சம்பவங்களை தொடராக ஞாபகத்திற்கு கொண்டுவந்தது.


இலங்கையில் சாவுகள் நிகழ்தல் குறைந்து, நிகழ்த்தப்படுதல் அதிகரித்த பின்னர் செத்த வீடுகள் ஒன்றும் புதினத்திற்குரியதல்ல. இருப்பினும் ஒரு செத்த வீட்டில் இருந்தே இன்னொரு செத்தவீடு தீர்மானிக்கப்படுவதால் (கவனிக்க இங்கே திருமணத்தில் நிச்சயப்படும் இன்னொரு திருமணம் என்பது மாறியுள்ளது) செத்த வீடுகள் தவிர்க்க முடியாமல் கவனத்திற்குரிதாகின்றது.


1997 க்கு பின்னான சில காலங்கள் நான் பாடசாலைக்கு போகும் பொழுதுகளில் எந்த கடைகளுமே காலை ஒன்பது பத்து மணி வரை திறந்து இருப்பதில்லை. ஏனெனில் இரவில் வேட்டையாடப்பட்டவர்களின் உடல்கள் காலையில் கடை விறாந்தைகளில் கிடக்கும். பாவம் முழுவியளத்திற்கு அவரவர் அதிஸ்ரத்திற்கு ஏற்ப இரண்டோ மூன்றோ விறாந்தையில் கிடக்கும். பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் என்ன செய்வோம். முதலில் ஒதுங்கிப் போனோம். பின்னர் எங்களுக்கு அது ஒரு ஸ்கோர் சொல்வது போல ஒரு போதை தரும் ஒன்றாகியது. ஒவ்வொரு கடை விறாந்தையாய் நைசாய் நோட்டம் விட்டால் கணக்கு தெரிய வந்திடும் இன்றைக்கு டவுணுக்குள் மொத்தம் எவ்வளவு என்று. இப்படி நாங்களெல்லாம் பிணங்களிற்கும் , மரணங்களுக்கும் அஞ்சாதவர்கள் என்றும் அவை எங்களுக்கு பழக்கம் மிக்கவை என்று சொல்வதில் தான் எங்களுக்கு எத்தனை பெருமை.


அண்மையில் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைகழகத்தின் ஊடக வள நிலையத்தின் மாணவன் டிலக்சனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பெரும் கூட்டம் என்னுள் பல கேள்விகளை எழுப்பியது.

யாழ்ப்பாணத்தில் இன்னமும் இவ்வளவு பேர் செத்த வீட்டுக்கு போகக்கூடியவர்கள் இருக்கிறார்களா? அடுத்தது டிலக்சனுக்கு சூடு விழுந்த அன்று கூச்சல் போட்டவன், சடலத்தை தூக்க உதவியவன், விசாரணையில் சாட்சி சொன்னவன், செத்தவீட்டில் பாடை தூக்கியவன், பக்கத்துவீட்டுக்காரன், தோரணம் கட்டியவன், தோரணம் கட்டியவனின் சொந்தக்காரன், எனப் பலரில் இன்னமும் ஏன் ஒருவர் கூட சுடப்படவில்லை என்பது. தினசரிப் பத்திரிகையாளர்கள் இவர்களின் விபரங்களை எடுத்து வைத்துக் கொண்டால் செய்தியை முதலில் தர உதவும்.


இதே போல செத்தவீட்டில் இருந்து தீர்மானிக்கப்பட்ட இன்னொரு செத்த வீட்டின் கதையை உங்களுக்கு நான் சொல்லமால் இருக்கேலாது. இது நடந்தது 2005 இன் முற் பகுதியில். திருகோணமலையில் ஐந்து பாடசாலை மாணவர்கள் கடற்படையினரால் காதுக்குள் துப்பாக்கி குழல் வைக்கப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டனார். இது திட்டமிட்ட கொலை அல்ல எனவும் தற்செயலாய் நடந்ததோ, வேறு தரப்போ செய்து இருக்கலாம் என சொல்லப்பட்ட அந்த நேரத்தில் தான் அங்கிருந்த உதயன் பத்திரிகை நிருபர் சுகிர்தராஜனின் செத்தவீடு தீர்மானிக்கப்பட்டது. அவர் முதலில் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்களின் உடல் கிடந்த இடத்திற்கு சென்று காதினுள் வெடிவைத்து கொல்லப்பட்டதை துல்லியமாக படம் எடுத்து உதயனின் எழுதினார். இதற்கு பிறகு அந்த ஐந்து மாணவர்களின் செத்த வீடு மிகப் பெருமளவிலான ஜனத்திரளோடு நடந்தது. தொலைக்காட்சியும், இணையத்திலும் அந்த செத்த வீட்டு படங்களை நான் பார்த்து போது எந்த பயமும் இல்லாமல் இவ்வளவு சனங்கள் வந்திருக்கிறார்களே என்று நினைத்துக்கொண்டேன். நான் நினைத்துக் கொண்டது சரியாகியது இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுகிர்தராஜன் அடுத்து வந்த ஒரு செவ்வாய்க்கிழமையில் சுட்டுக்கொல்லப்பட்டார். பிறகு அவரின் செத்தவீடும்......


ஆகவே ஆயிரம் செத்தவீட்டுக் கதைகள் உண்டு நண்பர்களே. உங்களிடம் செத்தவீட்டுக் கதைகள் இருந்தால் சொல்லுங்கள். செத்தவீடுகளை பகிர்வோம். செத்தவீடுகளை தொடர்வோம். ஏனெனில் எங்களின் செத்தவீடும்.....