Sunday, October 29, 2006

கண்ணம்மாவின் குழந்தை – 1

அர்த்த சாமத்தில்
வீரிட்டழும் குழந்தையை
மார்போடணைத்த படியே
அடுப்பை ஊதுகின்றாள்
கண்ணம்மா.

பாம்போ பல்லியோ
ஏதோவொன்று படுக்கையிற்
பிள்ளையைத் தீண்டியிருக்க வேண்டும்.
அம்மாவென்றே ஒரு வார்த்தை
உச்சரிக்கத் தெரியாத
பச்சைக் குழந்தையின் உடலில்
எப்பகுதி கடிபட்டிருக்கும்.

விழியிரண்டிருந்த போதும்
ஒளியிழந்த வீட்டினுள்
கடிவாயைக் கண்டு கொள்ள முடியாது
அடுப்பை நன்றாய் ஊதுகின்றாள் தாய்.

அடுத்தடுத்த வீடுகளிலும்
கட்டை மூட்டுவதுதான் வழக்கம்.
அங்கிருந்தும் வெளிச்சம்
பெற முடியாது.

இரண்டு யானைத் தீப்பெட்டிகள்
இல்லாது போன போதும்.
இருக்கின்ற தீப்பெட்டிகள்
யானை விலையைத் தமதாக்கிக் கொண்டதால்
தீக்கடை கோல் கண்டு பிடித்த
காலத்திற்குத் திரும்பி விட்ட
நம் வாழ்வை எண்ணி
நொந்தவாறே
அடுப்பை ஊதுகிறாள் அவள்.

சிறு பொறி மெல்ல மெல்லப்
பிரகாசித்துப்
பெரு வெளிச்சமான போது
பிள்ளையின் முகம் பார்த்தாள்
கண்ணம்மா.

கடிவாயை இனிக் கண்டு
கொள்ளத் தேவையில்லை.
பிள்ளை நிரந்தரமாகவே
தூங்குகின்றது.

மூட்டிய நெருப்பு நாளை
கொள்ளி வைக்க உதவும்.

இது தி.உதயசூரியன் அவர்களின்
  • கண்ணம்மா
  • என்னும் கவிதை தொகுப்பில் வந்த கவிதை.

    2 comments:

    கானா பிரபா said...

    யதார்த்தம் தொனிக்கும் கவிதையைத் தந்தமைக்கு நன்றிகள் நிலவன்.

    நிலவன் said...

    //யதார்த்தம் தொனிக்கும் கவிதையைத் தந்தமைக்கு நன்றிகள் நிலவன்//

    இந்த கவிதை தொகுதியில் உள்ள கவிதைகள் அனைத்துமே யதார்த்தம் ஆனவை தான் பிரபா அண்ணா..

    வருகைக்கும் தருகைக்கும் நன்றி