வீதியெங்கும் அலைந்து திரியும்
நிழலுருக்களில்
நீயும் இருப்பதாய்
தோன்றுகின்றதெனக்கு,
உன்
அழுத்தமான
முத்தத்தின் ஈரம்
இன்னமும் காய்ந்திருக்காது
உன் மருமகளின் கன்னங்களில்.
நீ
மூச்சு முட்ட முட்ட
இறுக்கி அணைக்கும் ஈர ஸ்பரிசம்
அவளுக்கினிமேல்
எப்போதுமிருக்காது.....
அக்காவின் விறைத்த கைகள்
பெற்ற மடமடத்த யூரோத்தாள்களின்
இசைக்கருவியை இசைக்கவும்
இனியாரும் கிடையாது
உன்
கல்லறை தடவுகையில்
நாதமெழுவதாய்
கனவிலிருக்கிறது
காற்று,.....
தன்னை எடுத்து பிசைந்து
மெட்டமைக்கும் கனவுக்கு
ஆளில்லை என நாதியற்று கிடக்கிறது.
நேற்றைய பொழுதில் தவறவிடப்பட்ட
உன் கையசைப்பை
நினைத்தபடியே
வீதியோரம் நிற்கின்றேன்.
இனி எந்த கையசைப்பையும் தவற
விடுவதில்லையென
கைகளை உயர உயர தூக்கி
அசைத்த படியே....
சில நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளரான எனது நண்பன் யுத்தக்களமொன்றில் இறந்த பின் எழுதியது...
நிலவன்